Sunday 27 April 2014

சிநேகம் - சிறுகதை 2


இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை.

அதுவும் இவ்வளவு அருகில் எதிர் பார்க்கவில்லை.அதன் வேகமும், 

பாய்ச்சலும்,உயரமும் நொடியில் என்னை பயமுறுத்தி அகன்றன.




மனதின் ஆட்டம் நிற்கவில்லை






மூச்சு வேகவேகமாய் இழுத்துக் கொண்டிருந்தது நிதானம் வர.

ரிஷிகா கடலையே பார்த்த வண்ணம் தன்னிலை இழந்ததால், குதிரைச்

சவ்வாரிக்காரர்கள் போட்டியிட்டு வந்ததை கவனிக்கவில்லை. 

அவளையும், கடலையும் தவிர சுற்றுப்புற நினைவில்லை. அதனால் தான் 

இந்நிலை.


ரிஷிகா… கடலிடம் வந்த போதெல்லாம் கால்களில் அதன் தழுவலும்,

கண்கள் முன்னே விரிந்த நீர்ப்பரப்பும் அவளை கட்டிப்போட்டன. பார்க்க,

பார்க்க மனம் ஏனோ…! மெளனமாய் போயிற்று. ஒவ்வொரு அலைகளாய் 

வந்த வரவை பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை. காலின் தழுவல் மனதை 

வருடிற்று. மனம் லேசாய், தியானம் செய்தது போல் தோன்றிற்று


இரவில் ஆழ்ந்த அமைதியான தூக்கம். காலையில் எழுந்த போது 

உற்சாகமாய் இருந்தது. தினமும் சில நாட்கள் செல்ல தூக்கம் சுகமாய் 

கைகூடிற்று




ஒரு நாள். உற்சாகமற்ற காலை வேளை. வேலை ஓடவில்லை. செய்ய 

விருப்பமும் இல்லை. கடனே என்று அந்த நாளும், வீட்டு வேலைகளும் 

சென்றன.         

அழைப்பு மணி அடிக்க….



அலுவலகத்தில் இருந்து இன்று சரியான நேரத்திற்கு வந்த கணவர் 

ரமேஷைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.




குளம்பி அருந்தி பேசிக் கொண்டிருக்கும் போது  ரமேஷ், என்ன காலார 

நடந்து கடற்கரைக்கு போகலாமா…? எனக் கேட்டார்.


ஓ… போகலாமே….! தனியாகப் போய்க் கொண்டிருந்தவளுக்கு, இன்ப 

அதிர்ச்சியாய் இது இருந்தது.


5 நிமிடத்தில் இருவரும் கிளம்பிவிட்டார்கள். பத்து, பதினைந்து 

நிமிடத்தில் கடலின் முன்னே இருந்தார்கள்.




இதமான குளிர் காற்று. கடலும் அலைகளும், கால்களின் அதன் 

தழுவலும்……! என்ன ஒர் ஆனந்தம். அப்பப்பா………!!! அதை உணந்து 

ரசித்தவர்களுக்கு புரியும்.


மண்டையில் ஒரு பொறி தட்டிற்று. ஏன் இன்று தூக்கம் வரவில்லை….? 

கொஞ்ச நாட்களாய் நல்ல தூக்கம் வந்ததற்கு நாம் தொடர்ந்து 

கடற்கரை வந்தது தானோ..? . நேற்று ஏனோ கடற்கரை 

செல்லவில்லை. அதனால்…..தான் தூக்கம் இல்லையோ…? என மனம் 


வினவிற்று



நித்திரை இல்லாதவர்களுக்கு அல்லவா…? நித்திரை கிடைத்த அன்று 

உள்ள சுகம் புரியும். இல்லையா நான் சொல்வது.


தனித்தும், சில சமயங்களில் சற்று இருட்டினாலும் இருவருமாய் நடந்து 

வந்து கடலை பார்த்தவாறு நடைபாதையில் அமர்வதும், சில சமயம் 

நீரில் கால்களை நனையவிடுவதும், மனதுக்கு இதமான தருணங்கள் 

அவை. ஆகையால் தூக்கம் அணைத்துக் கொள்ளாமல் என்ன 

செய்யும்……ஹூம்.




கண்கள் முன்னே நீலக் கடல். குளுமையாய்…..! சுத்தமான காற்று…. 

புத்துணர்ச்சி ஜிவ்வென ஏறுகிறது. அலைகள் வந்த வண்ணம்…. காண 

காண … எண்ண அலைகள் ஓய்ந்து போய் பார்வை நிலை குத்தி நிற்கிறது.


இயற்கையோடு இணைந்து, இசைந்து இருத்தல் அழகான தருணங்கள். 

கால ஓட்டத்தில் நாம் இவற்றை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். 

மனதிற்கு மருந்தை புதைத்து வைத்திருக்கிறது இயற்கை.

     
    கடலே…..

    நீ அசைந்து கொண்டிருப்பதால் தானோ

    நான் உன் முன் அசையாமல் நிற்கிறேன்.


 

கடலோடு ரிஷிகாவுக்கு சிநேகம் 

மலர்ந்தது










R.Umayal Gayathri.


2 comments:

  1. ரசித்த வைத்த கதை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete