கரு நீலக் கம்பளியில்
சிதறிக்கிடக்கின்றன
நட்சத்திர மல்லிகைகள்…
அதன்
ஒளி நடன அசைவிலோ
மனம் மொட்டவிழ்க்க
இரவு சிநேகம் கொள்கிறது
இருட்டு யானைப் பசிக்கு
அன்ன உருண்டை வீசப்பட்டதோ ஆகாயத்தில்
பார்வையில் பசியடங்கியோர்
படைப்பர் மற்றோர்க்கு கவி விருந்து
பூத்த வேர்வைப்பூக்களை
முத்தத்தால் கொண்டு செல்லும்
நீர்காற்று
நீரும் காற்றும் நட்புடன்
கைகோர்க்கும் நேரம்
கையோடு கொண்டு வரும் பரிசு
நறுமணம்
யாருக்கு?
இரவை சிநேகிக்கும்
தோழர்களுக்கு…
இயற்கையை சிநேகிக்கும் அத்தருணம்
அமைதி
ஊடுருவிப் பார்க்கும் உளக்கண்
விழிப்புணர்வு என
ஏதோ ஒன்று
என்னுள் விரிந்து
என்னுள் கலந்து
எல்லாமுமாய் என்னுள் நின்றது
இரவுக் கருமையின் உயிர்ப்பில்
இதயம் வெப்பத்தை உணரத் தொடங்கியது
என்னுள்ளே நீ
உன்னுள்ளே நான்
சிரித்தது ஆன்மா
தனிமையான இரவு நேரம்
தருகின்ற நட்பின் பாலம்
கரம்கோர்த்து உலாவலாம்
இரவை சிநேகம் கொள்வீர்.
வாசிக்க வந்தவர்களுக்கு
நன்றி
உமையாள் காயத்ரி
புகைப்படம் - நன்றி கூகுள்
கருத்து பதிவிட்டோர் அனைவருக்கும் நன்றி. என் தளத்தில் சிறு பிரச்சனை இருப்பதால் என்னால் கருத்திட இயலவில்லை. மற்றவர் தளத்திலும் எனக்கு அவ்வாறே காட்டுவதால் கருத்திட இயலவில்லை. நன்றி சகாக்களே.
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? பதிவு அருமை. கவிதை நன்றாக உள்ளது. ரசித்தேன்.
அழகியதோர் இரவை உறவு கொண்டாடி சிநேகித்துக் கொள்ள அருமையான தருணங்களாக உருவாக்கித் தந்த ஒளி பொருந்திய நிலவிற்கும், கூடவே நறுமணம் கமழும் நீர், காற்றுக்கும், தமிழ் எனும் அமிழ்தை கொண்டு வரிகளாக கோர்த்து தந்த தங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான ரசிப்பு...
ReplyDeleteஆஹா கவிதை வரிகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteஅருமையான கவிதை. ரசித்தேன்
ReplyDelete