Friday, 1 November 2019

அப்பா....கவிதை / Appa..... kavithai

 


அப்பா இல்லையேயென
ஆதங்கமாய் இருக்கிறது

அப்பா அன்பின் புதையல் அவர்
அறிவின் அருவி அவர்
அனுபவத்தின் புத்தகம் அவர்

நேர்வழி நடக்க நேர் பாதை காட்டுவார்
உண்மையின் சக்தியை உணரவைப்பார்
யாசகம் கேட்காது கொடுக்க கை பழக்குவார்
மனதில் பட்டதை மகிழ்வுடன் செய்ய ஊக்கப் படுத்துவார் 

 உன்னால் முடியும் என்பதை முயலப் பழக்குவார்
செய்யும் வேலையை திருந்தச் செய்யச் சொல்லுவார்
குழந்தையாய் இருந்தாலும் தாய், தந்தையின் கஷ்டம் கண்டு 
வளர வேண்டும் என்பார் 
வீட்டின் சூழல் தெரிந்தால் தான்
வாழ்வின்  நிதர்சனம் புரியுமென்பார்

வீட்டின் செலவு செய்யும் பைசாவுக்கு
அம்மாவிடம்  கணக்கு எழுதி வாங்கிவா என்பார் 
ஐந்து பைசா என்றாலும் 
ஐய்யம் இன்றி எழுதி விடு
ஆடம்பரமாய் ஆடிவிட்டால்
ஆட்டம் காணும் வாழ்க்கையென்பார்

ஆசைப்பட்டு கேட்டு விட்டால் 
அவைகள் நம்மைத் தேடிவரும்
தட்டிக் கொடுத்து வளர்த்திடுவார்
தவறு செய்தால் உடன் திருத்திடுவார்

உள்ளதில் உயர்வாய் வாழ்ந்திடுவார்
நெறியில் தவறாது நின்றிடுவார்
இருவர் பிரச்சனைக்கு நீதி கேட்டால்
சாயாது நீதி வழங்கிடுவார்

அவர் சாய்ந்து விட்டாலும்
அவரின் நேர்மை அவரை 
வாழச் செய்து கொண்டிருக்கு

வளரும் வயதில் நீ வேண்டுமெனக்கு
வாழ்க்கை புரியத்துவங்கயிலே - நீ
வானுலகம் சென்றாயே..
நீரற்ற பூமியின் பயிராய் நாங்கள்
நீந்திட தவித்தோமே...

வானம் பார்த்த பூமியாய்
வாழ நாங்கள் பழகிக் கொண்டோம்
தத்தி தவழ்ந்து நிற்க முயன்றோம்
தாயாய் அவள் தத்தித் தவித்தாள்
தன் மானமாய் வளர்த்தெடுத்தாள்

தாய் தந்தையின் நேர்மை உரத்தால்
நெஞ்சு நிமிர்ந்து வாழ உரம் கொண்டோம்
கேட்பது அசிங்கம் என்று சொல்லி வளர்த்ததால்
கொடுக்கும் நிலையில் இருக்கின்றோம்
காசு,பணம் என்று மட்டும் அர்த்தமில்லை
அன்பு, அறிவு,தென்பு,வார்த்தை,தைரியம்,ஊக்கமென
இது போன்றும் கொள்ளலாம் 

உண்மை,நேர்மை,நாணயத்தை
ஊட்டி வளர்த்த காரணத்தால் 
உயர்ந்து இன்று வாழ்கிறோம் 

அப்பா நீ.........இல்லையேயென
ஆதங்கமாய் இருக்கிறது

பசுமரத்தாணி போல் இறங்கிப் போய் இருக்கிறாய்
உன் நினைவை கழற்றி எறியவும் முடியவில்லை
தூக்கி துக்கப் படவும் பாரம் தாங்கவில்லை
என் செய்வேன்....என் செய்வேன்
நாற்பது வருட காலமாய் - நான் 
உன்னை நினைத்து தவிக்கிறேன்
நீ வேண்டும் என துடிக்கிறேன்
அப்பா...எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை

துள்ளித்திரிய வேண்டிய வயதில்
துயரமான வாழ்க்கையின் பரிமாணம் என் முன்
இவ்வளவு தான் வாழ்க்கை என பார்த்ததால் தானோ
எனக்கு வாழ்வின் மேல் பிடிப்பற்று போய் விட்டது

எட்டி நின்று எங்களுக்கு உதவாமல்
பிறர் வேடிக்கை பார்த்ததால் தானோ
பிறர் மேல் நம்பிக்கை அற்றுப் போய் விட்டது

வளர்ந்த பின் ஒட்டி உறுஞ்சும் 
ஒட்டுண்ணிகளைக் கண்டால்   வெறுப்பு வருகிறது

வாழ ஆரம்பிக்கும் போதே
வாழ்வின் பயத்தை எனக்கு கொடுத்து சென்று விட்டாய்

அமைதியாய் நீ சென்று விடாய் -ஆனால்
அமைதி என்பது எனக்கு இல்லாமல் போய் விட்டது

நீ இல்லை என்பது நிதர்சனம்
வாழ்வு இப்படி என்பது நிதர்சனம்
ஆனாலும் என்னால் இயலவில்லையே அப்பா

என் வாழ்வின் சொர்க்கம் நீயல்லவா....
என் வசந்த காலம் சிறுபிராயமல்லவா...
காயத்ரியின் காயமுள்ள வரை
காப்பாள் உன்னை நினைவில்...

உன் மகளாய் உன் கை பிடித்து நடக்கவே 
நான் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பேன்.
 


உன்னை தந்தையாய் தந்த இறைவனுக்கு நன்றி உள்ளவளாய் இருப்பேன்.
உன்னை என்னிடமிருந்து பிரித்த இறைவன் மேல் கோபமாயும் இருக்கிறேன்.


11 comments:

 1. ஆதங்கம் கவிதை அருமையாக வந்திருக்கிறது

  ReplyDelete
 2. அருமை...

  அனைத்தும் உண்மைகள்...

  ReplyDelete
 3. அப்பா கவிதை என்றதும்நினைவுக்கு வந்தது அப்பா தன் தோள் மீதுஅமர்த்திகடவுளைக் காண்பித்தார் அப்போது தெரிய வில்லைகடவுளின் தோள் மீதமர்ந்து கடவுளை தரிசித்தேன் என்று

  ReplyDelete
  Replies
  1. //அப்போது தெரிய வில்லைகடவுளின் தோள் மீதமர்ந்து கடவுளை தரிசித்தேன் என்று//

   ஆம் உண்மை ஐயா.
   நன்றி

   Delete
 4. //உன் மகளாய் உன் கை பிடித்து நடக்கவே
  நான் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பேன்.//

  நானும் அப்படித்தான் உங்களை போல் நினைக்கிறேன்.

  கவிதை அப்பாவின் நினைவுகளை, அப்பாவின் மேன்மையை, உங்களின் பாசத்தை, நேசத்தை சொல்கிறது.
  கவிதை படித்து என் அப்பாவின் நினைவு வந்தது.


  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா //கவிதை படித்து என் அப்பாவின் நினைவு வந்தது.//
   அப்பாவின் நினைவு வந்தால் எனக்கு கவிதை வந்தது.

   நிறைய நாட்களுக்கு அப்புறம் நேற்று கவிதை எழுதிய பின்பு மனம் நிறைந்து இருந்தது.

   நன்றி

   Delete
 5. வணக்கம் சகோதரி

  அப்பா கவிதை அருமை.

  /உன்னால் முடியும் என்பதை முயலப் பழக்குவார்
  செய்யும் வேலையை திருந்தச் செய்யச் சொல்லுவார்
  குழந்தையாய் இருந்தாலும் தாய், தந்தையின் கஷ்டம் கண்டு
  வளர வேண்டும் என்பார்
  வீட்டின் சூழல் தெரிந்தால் தான்
  வாழ்வின் நிதர்சனம் புரியுமென்பார்/

  அழகான வரிகள். அப்படி அப்பாவின் கஸ்டம் தெரிந்து வளர்ந்ததால்தான் அப்பா நம்மை விட்டுப் பிரிந்து சென்ற கஸ்டமான காலகட்டங்களையும் தாங்கிக் கொண்டு இருக்கிறோமோ என நினைக்கறேன். நானும் என் தந்தையை பிரிந்த காலத்திலிருந்து மீள இயலாமல் தவிக்கிறேன்.

  அப்பா எவ்வளவு உயர்ந்தவர் என்பதை காட்டிய தங்கள் கவிதை வரிகளை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 6. அப்பா.... நல்ல கவிதை....

  ReplyDelete
 7. அப்பாவின் நினைவுகள் என்றுமே இனிமையானவை.

  ReplyDelete