Saturday 14 December 2013

குளிர்






இரும்பு அறையை  துளையிடும் வல்லமை உண்டு குளிருக்கு. இதமான AC யின் குளிர் எங்கே?   இதயம் ஆட்டும் இயற்கையின் குளிர் எங்கே?   குளிர்கால வேட்டை தொடங்கிவிட்டது.

 மேகப் படையினரின் அணிவகுப்பு கலையாதா என ஒர் ஏக்கம். ஆனால் புதிது புதிதாக மேகப் படையினர் வந்த வண்ணம். கோபத்தால் அவர்களின் முகங்களோ கருமை பூசிக்கொண்டன. கர்ஜனைகள் இடித்தன, சிரிப்போ மின்னின.   சண்டையின் சப்தங்கள் மழையாய் பொழிந்தன.   


விட்டு விட்டு மழைப் பொழிவு தொடர குளிர் கால லயம் மிதந்தது. உடலோ பியானோ இசைக்க கற்றுக் கொண்டன.   கால்களோ தன் பங்கிற்கு பரதம் பயின்றன.   தமிழ் சினிமா வில்லன் போல் உடை அலங்காரம் செய்து கொண்டால் தான் சமாளிக்க முடியும்.   உடல் எடையோ 2 கிலோ கூடிவிட்டது. ஆமாஇல்லயா பின்ன ஆடையின் அடுக்கு வரிசையில், என்ன நான் சொல்வது..?   இரவு நீண்டதினால் பகல் குறுகியது.   குறுகிய பகல் கூட தன் வேலையைச் செய்ய முடியவில்லை மேகங்கள் முட்டுக்கட்டை போட்டன.

சூரியனை பிரிந்த ஏக்கம், அவன் வரவை எதிர்நோக்கி இருக்கும் மனம்.   எட்டி எட்டிப் பார்க்கும் ஆதவனுடன் செல்லச் சண்டை ஏமாற்றுவதற்காக இயல்பைத் தொலைத்த இயலாமை. செயல்கள் செல்லரிக்க தொடங்கின.  அன்னியமான இயற்கையின் பரிபாஷை.

இசை அமைப்பாளரான சந்தோஷம் காற்றரசனுக்கு ஏற்பட்டது போல வகை வகையாய் வாசித்தல் வந்த வண்ணம் இருக்கிறது. வீரியமோ வேகமாய் வீசியது.   வெளியே போய் பார்த்தால் அள்ளிக் கொண்டு போய்விடுவான் போல.   உள்ளேயிருந்தால் இடுவலில் உரச வந்து விடுகிறான்.   அப்பப்பா அவன் அன்பு தாங்க முடிய வில்லை.

கைகள் fair & lovely பூசிக்கொண்டது போல் வெண்மையாகின. ரொம்ப நாட்கள் பூசினது போல் சுருக்கம் கண்டன.   விரல்கள் மெலிந்தனவோ?  சூம்பிப் போயின.

கால்களுக்கு புது மரியாதை பற்றிக் கொண்டது.   மடங்கியே இருக்கிறது நீள்வது இல்லை.    நடைப் பயிற்சி மறந்து விடுமோ ?    முழங்கால்கள் முணுமுணுத்தன.  இழு பட்ட தசைகள் இரைந்தன.  

ஆவி பறக்கும் ஆகாரம்.   ஆவல் மிகும்.   அல்ல அல்ல ஆறிவிடும். சூடு உள் பரவ சுகமான இன்பம் அப்பா.   காபியோ, தேனிரோ குடிக்க சலிக்காது.
ஆடையினால் வந்த உடல் எடையோ  அப்படியே தங்கிவிடும். ஆம் இல்லயா பின்ன…?   செலவு செய்யாத உடலின் உழைப்பு சேமிப்பாய் கொழுப்பானது.   கொழுப்பை உட் கொண்டால் தான் குளிரை விரட்ட முடியும்.     

இயற்கையின் சிறு மாற்றம் நம்மால் தாங்க இயலவில்லை.  ஆனால் நாமோ இயற்கையை இயற்கையாய் இருக்க விடுவதில்லை.    மெளனம் இயற்கை கலையுமாயின் பேசும் பாஷை திகிலூட்டும்.    நம்மால் முடிந்த கைகுலுக்கள்களை  இயற்கையுடன் செய்து கொள்வோம்.    சிறு சிறு அன்பு த்  தொடர் காக்கும் அல்லவா உலகத்தை.  

கைகுலுக்கி கரம் பிடிப்போம் வாருங்கள் நண்பர்களே.
.


ஆர்.உமையாள் காயத்ரி.

1 comment: