Thursday, 6 September 2018

கற்பூரவள்ளி ரசம் / Karpuravalli Rasam

 
தொண்டை  நமநமவென சளி பிடிப்பது போலிருந்தது. சரி ரசம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் வழக்கமாய் செய்வது போல்  இல்லாமல் வித்தியாசமாய் செய்யலாம் என நினைக்கும் போது பால்கனியில் வளரும் கற்பூரவள்ளி காற்றில் தலையாட்டி வாவா என அழைப்பு விடுத்தது. சரி என ஆசையாய்   இலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன். என்ன மணம்....காற்றில் சுகமாய்...பரவ நுகர்ந்தேன். கடவுள் என்னமாய் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றை மறைத்து வைத்து இருக்கிறார் இல்லையா.....?



கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர்.  இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவல்லியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான  பூச்சிகளும் தென்னையைத் தாக்காது. கற்ப மூலிகையில் கற்பூரவல்லிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வல்லி  என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவல்லி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில்  காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கற்பூரவல்லி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி  பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு சிறு தேக்கரண்டி அளவு  தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின்  அபகாரம் குறையும்.

கற்பூர வல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை,  தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு  பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி  வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல்  ஏதுமின்றி பாதுகாக்கும். 

சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து. குழந்தைகளுக்கு உண்டான  மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல்  திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வல்லி இலையையும், துளசி இலையையும்  சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே  நீங்கும்.

கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு  கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல்  அடைப்பு சீராகும் . கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல்,  தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும். கற்பூரவல்லி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து  காப்பாற்றும்.



நன்றி தினகரன் நாளிதழ்

இதன் பயனை அனைவருமறிந்து கொள்ள இங்கு அதனை பதிவு செய்து இருக்கிறேன். 



தேவையானவை

கற்பூரவள்ளி இலைகள் -  12 - 15
புளி - சிறிய நெல்லி அளவு
தக்காளி -  பாதி பழம் ( இல்லை என்றால் 1)
பூண்டு - 2
மிளகாய் - 2
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 1 துண்டு
உப்பு - ருசிக்கு


தாளிக்க

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

மிக்ஸியில் மிளகு, சீரகம்,மிளகாய், பூண்டு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

பின் கற்பூரவள்ளி  8 இலைகளை போட்டு கொரகொரப்பக அரைத்து எடுக்கவும்

புளியை கரைத்து எடுத்துக் கொண்டு அதில் தக்காளியை சேர்த்து நன்கு பிசைந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விடவும். 

அரைத்ததை சேர்த்து கலக்கவும். 4 இலைகளை கிள்ளிப் போடவும்

எண்ணெய் ,நெய் விட்டு காயவும் கடுகு சேர்த்து  அது வெடிக்கவும்,வெந்தயம் சேர்த்து வாசம் வரவும் பெருங்காயம் சேர்க்கவும்.  

ரசத் தண்ணீரை ஊற்றவும்
சுற்றி நுரைக்கவும் ,உப்பு வெல்லம் சேர்த்து விட்டு அடுப்பை அணைகவும்.





7 comments:

  1. செலவே இல்லாமல் எவ்வளவு உயர்ந்த மருத்துவங்கள்.
    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. >>> கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.. <<<

    மிகச் சிறந்த மருந்து இது..

    எங்கள் வீட்டில் கற்பூரவல்லி இருக்கின்றாள்...

    ReplyDelete
  4. வீட்டில் இருக்கிறது கற்பூரவள்ளி, செய்து பார்க்கிறேன்.
    கற்பூரவள்ளி பஜ்ஜி செய்வேன்.ரசம் செய்தது இல்லை.
    நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    ஆம். கற்பூரவல்லி மிகச்சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தவை.

    மிக சிறந்த மருத்துவ குறிப்பை அறிமுகப் படுத்தி அதில் ரசம் செய்வது எப்படி என செய்முறைகளோடு செய்து காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோதரி. பதிவு மிக அருமையாயிருந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. சமீபத்தில் என் அலுவலகத் தோழி கற்பூரவல்லி ஓமம், வெற்றிலை எல்லாம் போட்டு சூப் செய்து கொண்டு வந்திருந்தார். நானும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது இதையும் குறித்துக்கொண்டேன்.

    ReplyDelete
  7. ரசத்தில் கூட வெல்லம் சேர்ப்பீர்களா? நாங்கள் எப்போதாவது வெந்தயக்குழம்பு, காரக்குழம்பில் வெல்லம் சேர்ப்பதுண்டு.

    ReplyDelete