Saturday, 11 January 2014

நேசம்மரம் செடிகளுடன் பேசி இருக்கிறீர்களா? என்னடா…இது…? மனுசங்க கூட பேசுவோம்…. மரம் செடி கொடின்னு தோனுது இல்ல…!

மனுசங்க கிட்ட நாம பேசும் போது சில சமயம் கேட்பாங்க…. சில சமயம் கேட்பது போல பாவலா பன்னுவாங்க…. சில நேரத்தில் எடக்கு மடக்கா பேசி ஏன்டா… இவுங்க கிட்ட பேசினோம்னு பீல் பன்ன வச்சிடுவாங்க… இல்ல. இது எல்லாருக்கும் எப்பவாவது கண்டிப்பா நடந்து இருக்கும். என்னங்க நான் சொல்வது. அதற்காக நாம் நம்மினத்தோட பேசாமலா இருக்க முடியும்….?

அப்புறம் உலகம் என்னாகிறது….. அப்படிங்கிறீங்களா…?   ஆமாங்க ஆமா…!
நாம் வளர்க்கும் மரம் செடி கொடிகளோட பேசும் போது மனுசங்க மாதிரி ரியாக்ட் பண்ணாது தான். ஆனா நமக்கு யார் கூடவோ பேசின திருப்தி கண்டிப்பா வரும். நீங்க வாய் விட்டு பேசனும்னு அவசியம் இல்லை. இல்லயாபின்ன அது மாதுரி பேசிட்டு இருந்தோம்னா….. நம்ம ஊருல பயபிள்ளக என்ன நினைப்பாங்கன்னு தெரியாது. நீங்க சொல்வது கேட்டுடுச்சு… எனக்கு கேட்டுடுச்சு….


நாம் வளர்க்கும் தாவரங்கள் நம் குழந்தைகள் போல. அன்பான பார்வைகளும், கவனிப்பும், ஸ்பரிசதீண்டல்களும், உங்கள் உள் மொழிப் பேச்சும் அவசியம்.
அவைகள் கவனிக்கும், பார்க்கும், சிலிர்க்கும், கேட்டும் வளரும். உங்கள் சோகங்களை மறக்கச் செய்ய காற்றில் ஆடும், பூவால் சிரிக்கும், உங்கள் மேல் உரசும். 

மதிய நேரத்தில் எல்லோருக்கும் உண்டகளைப்பு, அல்லது வெயில் காரணமாய்  ஓய்வெடுப்பார்கள். சிலர் அவர்களுடைய வேலைக்காக செல்வார்கள். அச்சமயம் ஒருவிதமான அமைதியான தருணம். வீட்டின் வெளி வாயிலில் அமர்ந்து மரம் செடி கொடிகளை வேடிக்கைப் பார்ப்பது சுகம். பளீரென நீலவானம். அங்கங்கே மேகங்களின் பயணம் ஆஹா ஆஹா… நிதானமான காற்று நித்திரையை வரவழைக்க வகை செய்யும். காற்றுக்கு தலையாட்டும் மரங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாலே நேரம் போவது தெரியாது. காகா, மைனா, சிட்டுக்குருவி, இரட்டைவால்குருவி, இன்னும் ஒரு சிறிய குட்டிக்குருவி (தேன் சிட்டுன்னு நினைக்கிறேன்)  என அப்போது தான் நம் கண்களுக்கு இவைகள் நம் கூட இருப்பது புரியும். பிஸியான வாழ்க்கையில் இவைகளை கவனிக்க தோன்றாது. சிறிய குரலில் கீச்கீச்சென…. அவைகள் வாயை வேக வேகமாக பூவுக்குள் விட்டு தேனைக் குடிப்பது, அடுத்த பூவுக்கு தாவுவது, துறுதுறுவென அக்கம் பக்கம் பார்ப்பது ரசிக்கும் படி இருக்கும்  
       
காகா என்னையும் கவனி என கரைந்து ஈர்க்கும். தேனீக்கள் போட்டிப் போட்டு தேன் குடிக்கும். வண்ணத்துப்பூச்சிகள் அவைகள் தனி உலகமாய் நினைத்து ஆனந்தமாய் ஆடி ஆடி பறக்கும்.உட்கார்ந்து ரசித்தது போதும் என எழுவோமா…?


கேட்டுக்கு வெளியே வலப்பக்கம் முறையே தங்க அரளி சிறிய மரம், வேப்பமரம், புங்கைமரம். இவைகளுக்கு 4, 5 வருடங்கள் தான் வயது. கொஞ்சம் பூவும் காய்களும் என அதன் வாழ்வு தொடருகிறது. ஆனால் இடப்பக்கம் கொன்றைமரம் ஒன்று. அதே வயது தான்.

 ஆனால்  ம்…ஹும்….    நோ…பூ…  அப்புறமாத் தானே காய்க்க..


எனக்கு வருத்தம் இது இன்னும் பூக்களையே …. காய்க்களையேன்னு….. வருத்தம் இருக்காதா பின்ன. ஆசை ஆசையாக வைத்த மரங்கள் இல்லையா…? அம்மரத்தின் மேல் கைகளை வைத்து தடவிக் கொண்டே என்ன நீ இன்னும் பூக்காம காய்க்காம இருக்க….. கொன்றையாகிய நீ எத்தனை வருஷத்தில் இருந்து பூக்க ஆரம்பிப்பன்னு எனக்குத் தெரியாது. ஆனா உன் இன பெரிய மரங்கள் எல்லாம் ஊர்பூராவும் பூத்திருப்பதைப் பார்க்கும் போது நீ எப்பப் பூப்பன்னு ஆசையாக இருக்கு தெரியுமா..? அம்மாவுக்காக இந்த வருஷம் கொஞ்சமாகவாவது பூக்கக் கூடாதா…? வருடிக் கொண்டு மனதால் பேசினேன். ரோட்டில் போவோர் வருவோரிடமும் பேசினேன். சிலர் என்ன இங்க நிக்கிறீங்கன்னு கேட்பாங்க…. தூக்கம் வரலை போர் அடிக்குது அதான் அப்படிம்பேன். 


பின் கேட்டை மூடிக் கொண்டு தோட்டத்தில் வித விதமான வண்ண ரோஜா, ரோஸ் கலர் அரளி, மல்லி, சேன்ஞ்சிங் ரோஸ், குரோட்டன்ஸ், பவளமல்லி, இட்லி பூ சிகப்பு மற்றும் ரோஸ், ஊசிச் செம்பருத்தி சிகப்பு மற்றும் ரோஸ், வித விதமான செம்பருத்தி அடுக்கு, மற்றும் சாதாரணம், மற்றும் கலர் கலரானதும் கூட. தேக்கு, கருவேப்பிலை, வாழை, சங்குப்பூ, சாமந்திப்பூ - மஞ்சள், வைலட், இளமஞ்சள், தேன் கலர், அப்புறம் நாம் இப்போது முன் வாசல் படிக்கே வந்து விட்டோம். இங்கே பார்டர் செடிகள். என்னங்க வீட்டைச் சுற்றி ஒரு ரவுண்டு வந்துட்டோம் இல்ல…. 

இவைகள் ஒன்று ஒன்றின் மேலும் கைகளால் தடவி குசலம் விசாரித்து, அவைகளுக்கு நோய் என்றால் மருந்து அடிப்பதாய்ச் சொல்லி வர நேரம் வேகமாய் போய்விட்டது.


ஓகேங்க……. எனக்கு காப்பி நேரம் வந்து விட்டது. போய் சுடச்சுட காப்பி சாப்பிடனும். உங்க கூடவும் பேசி, அதே சமயம் தோட்டத்திலவும் எல்லாரோடவும் பேசி சந்தோஷமான டயர்டுங்க. வரட்டா……!!!   
    
ம்….    முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேனே….. ஒரு வாரம் கழித்து கொன்றை மரம் எனக்காக ஒரே ஒரு அடிக் கிளையில் முழுவதுமாக மஞ்சமஞ்சேன்னு பூத்திருந்தது.  எனக்கு சந்தோஷம் தாங்க முடியலை. இதை அப்போ யார்கிட்டயும் சொல்லி பகிர்ந்துக்க முடியலை. அந்த சந்தோஷ அதிர்வலைகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கண்கள் மட்டுமே அம்மரத்திற்க்கு நன்றி சொல்லின. காற்றில் கிளைகள் ஆட்டி நீ பேசியதை நான் கேட்கிறேன் என்றும் உன் மேல் எனக்கும் அன்பு உண்டு என்றும் நேச அதிர்வை அனுப்பியது. என் கைகள் அதனை தட்டிக் கொடுத்தது. இப்போது நகரில் அனைவரும் உங்க கொன்றை மரம் பூத்துக்குலுங்குவது எவ்ளோ அழகா இருக்கு., அது கொட்டிக் கிடப்பது மஞ்சள் கம்பளி விரித்தார்ப் போல இருக்குங்கிறாங்க. எனக்கு பெருமையோ பெருமை தாங்க. 

இப்ப புரியுதா…? இல்லைனா முதல்ல இருந்து படியுங்க…. வரட்டா….!!!    
ஆர்.உமையாள் காயத்ரி.
8 comments:

 1. ரசித்துப் படித்தேன் அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ரம் பூத்துக்குலுங்கும் சந்தோஷ அதிர்வலைகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

  அழகான பகிர்வுகள்.

  ReplyDelete
 3. felt very good reading this :)

  ReplyDelete
 4. அட.. உங்களுக்கும் இப்படியிருக்கா.நான் மட்டும்தான் இப்படின்னு நினைச்சேன்.
  நானும் இப்படித்தான் இனி வரவேவராது என்ற மரத்தை வரவைச்சாச்சு.அவைகளை வளர்த்து ஆளாக்கி பின் பூத்தால்,அல்லது காய்த்தால் மனதில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவில்லை. உங்க மரங்கள் நன்றாக இருக்கு.நல்லதொரு பகிர்வு நன்றி.
  இது எந்த இடம்?

  ReplyDelete
 5. உங்கள் தோட்டம் பார்த்த போதே நினைத்தேன்.ஓசூர்.இந்தியா. நன்றி.

  ReplyDelete