Sunday, 21 June 2015

எல்லோருக்கும் பிடித்த முதல் ஹீரோ...!!!





அப்பா… 
என் நினைவலைகள் பின்னோக்கி….
பயணம் செய்கிறது. 
வருடங்கள் ஏற…ஏற..
பயணத்தின் தூரமும் கூடுகிறது

அடிக்கடி பயணம் செய்து 
களைப்படைய விரும்பவில்லை
நிறைய களைப்படைந்ததால்..
ஆனால் - 
அது தான் பசுமையாய் 
நினைவில் நிற்கிறது. 

அன்பில் நனைந்த நினைவுகள் 
ஆழமாய் இறங்கி விட்டன 
கவலை என்றால் என்ன..? 
அறியாத வயது….
ஆனந்தம் ஆனந்தம் தான். 

எனக்கு மிகவும் பிடித்த மனிதர் 
அவரிடம் இருந்து தான் 
உண்மை, நேர்மை, நாணயம், 
எளிமையின் கம்பீரம்….
உள்ளது உள்ளபடி இருத்தல்..
என கற்றதை
சொல்லிக் கொண்டே போகலாம்..

அந்த அஸ்திவாரம் தான் 
எங்களின் வாழ்க்கையை 
எளிமையாக கடக்க உதவிய துடுப்பு. 

ஆனால்  அவர் போன பின் 
வாழ்க்கையின் நிதர்சனம்,வலிகள், 
ஆனந்தம் அப்படின்னா..? 
என எல்லாம் விட்டு போயின…
காலியான வெறுமை…
தங்கிவிட்டது. 

ஐயப்பனுக்கு பிரியமான பக்தர்…  
அவரே அழைத்துக் கொண்டார்
இன்றும் அவரின் மகள் என 
மற்றவர் சொல்லும் போது 
பெருமையாக இருக்கிறது. 
அவரின் நற்குணங்கள் 
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அப்பா…
எத்தனையோ குழந்தைகளின் 
முதல் நாயகன் அவர் தான். 

தந்தைக்குள்ளும் ஒரு தாய்மை உணர்வுண்டு. அது மேல் எழுந்தாற் போல் தெரியாது. நம்மை மனதில் சுமந்து பெற்றவர் அவர். ஆகையால் தானோ தாயுணர்வை மறைத்தே வைத்திருக்கிறார்...? நம்மை ஏற்றி விடும் ஏணி அவர். மெளனமாய் இருந்திடுவார். நம்முடன் நிறைய நேரங்கள் செலவிடாவிட்டாலும் நம்மை நன்கு அறிந்து வைத்திருப்பார். நமக்கெது பிடிக்கும் என நமக்கு தெரிவதை விட நம் அம்மா, அப்பாவிற்கு நன்கு தெரியும் என நான் நினைக்கிறேன். நமக்கு எது வரும் வராது என அவர்கள் துள்ளியமாக உரைப்பார்கள். 

நம்முடைய திறமைகளை கண்டுபிடித்து ஊக்கு விப்பார்கள். சிறுவயதில் ( 3, 4 வது படிக்கும் சமயம்) இருந்து எனக்கு கோலம் போடுவது, வரைவது என்பது மிகவும் பிடித்த ஒன்று. தெருக்களில் யாராவது அழகாய் கோலம் போடு இருந்தார்கள் என்றால் பார்த்து வந்த மறுநாளே எங்களில் வீட்டு வாசலில் போட்டு விடுவேன். அந்த பெரியவர்கள் அடுத்த நாள் பார்த்து விட்டு உங்க பொண்ணு சின்ன வயதுலயே எங்களை மாதிரி நல்லா போடுறா என்பார்கள். கண்ணு பார்த்தா கை வேலை செய்யும். இதை எங்க அப்பா நல்ல தெரிந்து வைத்திருந்தார். உனக்கு படிப்பை விட ஓவியம் நல்லா வருது ஆகையால் 6 வதில் ஓவியப்பள்ளியில சேர்க்கவா அப்படின்னார்...? அவர் கேலி பண்ணுகிறார்ன்னு தப்பா நினைத்து விட்டேன். (நீங்க வேற ரொம்ப மோசமா படிப்பேன்னு நினைக்காதீங்க ஒரளவு நல்லா படிப்பேன்.) இப்போ தோணுது சே...நாம தப்பு பண்ணிட்டோம் ஒழுங்கா ஓவியம் வரைய கத்துட்டு இருக்கலாம்ணு...
இப்போ வரை கத்துக்காம வரைந்திட்டு இருக்கேன். முறையா ஓவியம் வரைய கத்துக்கணும்னு ஆசை பார்க்கலாம்...இன்னும் காலம் இருக்கே.   


பழைய நினைவுகளில் மூழ்க மட்டுமே முடிகிறது...அப்பாவுடன் வாழமுடியவில்லையே...என வருத்தம் பலமடங்காக இருக்கிறது.
என் வாழ்வின் சுவர்க்கம்..........12 வருடங்களே...!!! கொடுத்துவைக்கவில்லையே...என நினைத்து.........


இதை முன்னமே படித்து இருப்பீர்கள்...தந்தையர் தினம் ஆகையால் என் தளத்தில் இன்று பதிவிட்டு இருக்கிறேன்.






23 comments:

  1. நீங்கள் அப்பாவுடன் இருந்த பழைய நினைவுகளை அருமையாக எழுதி இருக்கீங்க சகோ. தந்தையர் தின வாழ்த்துக்கள் !

    எனக்கும் இன்று என்னுடைய அப்பாவின் நினைவு .தான் நானும் அப்பாவை இழந்து எட்டு வருடங்கள் ஆகி விட்டது. எனது ப்ளாக்கில் அப்பாவின் நினைவுகள் பதிவு கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாவையிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகிறேன் சகோ நன்றி

      Delete
  2. நீங்கள் 12 ஆண்டுகள்!நான் ஐந்தே ஆண்டுகள் உமையாள்.!பொதுவாகப் பெண் குழந்தைகளுக்கு அப்பாவின் மீது அன்பு அதிகம் என்று சொல்வார்கள்.
    சிறப்பான பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா நன்றி

      Delete
  3. அற்புதமான சிறப்புப் பதிவு
    தங்கள் பதிவால்
    நானும் என பால்ய நினைவுகளில்
    உலவித் திரும்பினேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தந்தையின் நினைவுகள் மனதை கனக்க வைக்கின்றன.
    த ம 4

    ReplyDelete
  5. //அவரிடம் இருந்து தான் உண்மை, நேர்மை, நாணயம், எளிமையின் கம்பீரம்…. உள்ளது உள்ளபடி இருத்தல்.. என கற்றதை சொல்லிக் கொண்டே போகலாம்..//

    மிக அருமையான உணர்வு பூர்வமான ஆக்கம். பாராட்டுகள்.

    இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. அவரின் நற்குணங்கள் பகிர்வும் பதிவுகளில் உணர்கிறோம் சகோதரி...

    தந்தையர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. தந்தையர் தின நினைவுகள் - நெஞ்சை நெகிழ்விக்கின்றன.

    ReplyDelete
  8. Thank U a lot for remembering Your Dad.

    என் நெஞ்சோ,

    என்றோ , என் நினைவுகளில் சிறைபட்ட அந்த நிகழ்வினை கண் முன்னே நிறுத்தியது.

    1950 ம் வருடம் அல்லது 1951 ஆக இருக்கலாம்.
    நான் 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்பது மட்டும் தெரிகிறது.

    ஒரு நாள் காலையில் என் தந்தை ஏதோ ஒரு கோபத்தில், தன கையில் கிடைத்த எதையோ எங்கெயோ தூக்கி ஏறிய ,

    என் மேல் சற்றும் எதிர்பாராத வகையில் என் மேல் பட்டு நெற்றி முழுவதும் ரத்தம்.

    பெரிய அடி என்று ஒன்றும் இல்லை என்றாலும், தெப்பக்குளம் அருகே உள்ள மருத்துவகத்துக்குச் சென்று டிஞ்சர் அயோடின் எரிய எரிய அந்த கம்பவுண்டர் போட்டு ஒரு பிளாஸ்டர் ஒட்டி, இன்னும் 2 , 3 நாட்களுக்கு தண்ணீர் படாமல் பார்த்துக்கொள் என்றதும் நினைவில்.

    அப்பா, அப்படி ஒன்றும் பெரிய காயம் இல்லை என்று அம்மா சொன்னதால், கோர்ட்டுக்கு சென்று விட்டார். அவர் அன்றைய பிரபல வக்கீல். மேலும் அவருக்கு அன்று மிக முக்கியமான கேஸ் வாதாட இருந்ததாக, அம்மா சொன்னாள். நான் திரும்பி வரும்போது அப்பா வீட்டில் இல்லை.

    நான் ஸ்கூலுக்குச் சென்று விட்டேன்.
    ஒரு 3 மணி சுமாருக்கு, பள்ளியின் மேல் தளத்தில் என் வகுப்பில் எதோ ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த எனக்கு என் தந்தையின் குரல் மிகவும் சத்தமாக, சூரி, சூரி என்று விழுந்தது.

    நான் எழுந்து ஆசிரியரிடம், சார், எங்க அப்பா குரல் கேட்கிறது. நான் போக அனுமதி கொடுங்கள், என்று கேட்க,

    அவரும் என்னவோ ஏதோ என்று என் பின்னாடியே வர,

    அங்கு ரோடில், (நந்தி கோவில் தெரு, அனுமார் கோவில் அருகே)
    பள்ளி வளாகத்தின் கீழே , என் அப்பா நின்று கொண்டு இருந்தார். வகுப்பு நடக்கையில்,பள்ளி உள்ளே வர அவருக்கு அனுமதி தரப்பட வில்லை போலும்.

    என்னைப் பார்த்து என்னிடம் ஓடி வந்து, என் நெற்றியைத் தடவி
    கொடுக்கிறார்.

    வலிக்கிறதாடா என்று கேட்டார்.
    இல்லை என்று சொன்னேன்.

    இப்போ வலிக்கிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies

    1. வலிக்கிறதாடா என்று கேட்டார்.
      இல்லை என்று சொன்னேன்.

      இப்போ வலிக்கிறது. //

      அன்பின் நினைவுகள்....வலிக்கிறது...நன்றி ஐயா

      Delete
  9. மனம் தொட்டு விட்ட பதிவு ஏற்கனவே படித்த நினைவும் வந்து போனது.. மீண்டும் நினைவலைகள் அருமை..
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  10. திரு சென்னை பித்தன் சொல்லியிருப்பதைத்தான் நானும் சொல்ல வந்தேன். பெண் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல்தான் அதிக அன்பு இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ நன்றி

      Delete
  11. நினைவுகளில் ஒன்றினேன்.


    நன்றி.

    ReplyDelete
  12. அருமை உமா. ஆனாலும் மனம் கனக்கிறது. ஹ்ம்ம். உணர்வுகளால் அவர் உங்க கூடவேதான் இருப்பார்.

    ReplyDelete
  13. எல்லோருக்கும் பிடித்த முதல் ஹீரோ அவர்களுடைய அப்பாதான்! தந்தையை பற்றிய சிறப்பான நினைவுகள்! அருமை!

    ReplyDelete