Wednesday, 20 May 2015

குற்றாலம்



                                                   மெயின் அருவிப்படம் - கூகுள் நன்றி


குற்றாலம் அப்படின்னு நினைக்கும் போதே ஜில்லுங்குது மனசு இல்ல.....தென்காசி,குற்றாலம் அப்படின்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்...ஆமாம் பிறந்து 40 வது நாளில் இருந்து 10 வயது வரை அந்த தண்ணி குடித்து வளர்ந்தவ அந்த பாசம் இருக்காதா பின்ன...?


தென்காசி, குற்றாலத்தின் சாரலில் நனையும் ஊர். அவ்வளவு அருமையான ஊர். வாரா வாரம் சனிக்கிழமை பள்ளி விடுமுறையில் தானே எண்ணெய் நீராடமுடியும். ஆனா வீட்டுல எண்ணெய் குளியல் எனக்கு பிடிக்காதுங்க. பின்ன பக்கத்துல குற்றாலம் இருக்கும் போது வீட்டுல குளின்னா எனக்கு பிடிக்குமா...? பிடிக்காது பிடிக்காது.

எங்க அப்பா, எங்க அம்மா கிட்ட அவ ஆசைப்படுறா இல்ல கூட்டிக்கிட்டு போ அப்படின்னு சொல்லுவாங்க...எங்க அம்மா சில சமயம் என் கூட குளிப்பாங்க இல்லைனா பாவம் வீட்டுல குளித்து விட்டு எனக்காக வருவாங்க.

நல்லா தலையில எண்ணெய் வைத்துக் கொண்டு மெயின்அருவியில நின்னா சும்மா சுகமா இருக்கும். நின்னுட்டே இருப்பேன். எங்க அம்மா வா வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. வரவே மனசு வராது. தலையில கையை வைத்து தடவி பார்ப்பேன் எண்ணெய் இருந்தால் ம்கூம் எண்ணெய் போகலைன்னு நிற்பேன். பாவம் அவுங்க வீட்டுல போய் மதியம் சமையல் செய்யணும். அவுங்க கவலை எல்லாம் அப்ப எனக்கு புரியலை. நல்லா நின்னு தலையில எண்ணெய் போன பின், கண்ணு நல்லா சிவந்த பின் தான் வெளிய வருவேன். அப்புறம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு கடைப்பக்கம் போனா மனசே வராதுங்க. தலைக்கு பாண்ட், கிளிப், பந்து,வளையல்,அப்படின்னு நம்மள சும்மா இருக்க விடாம இழுக்கும். சில நேரங்களில் வாங்கிக் கொண்டு கிளம்புவோம். பஸ்டாண்ட் வந்து பஸ் ஏறி ஊருக்குத்தான். பஸ் காத்துல தலை சும்மா பஞ்சா புஸ்புஸ்சுன்னு பறக்கும். மனசும் தாங்க. ( இப்போ எண்ணெய் தேய்த்துக் குளிக்க தடை போட்டு இருக்காங்க. போன வருடம் கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என இருந்த மாதிரி நினைவு)


இப்போ சீசன் இல்லாத நேரம் ஆனா தண்ணி வருதுன்னு கேள்விப் பட்டு குற்றாலம் போகலாம்னு கிளம்பினோம். இல்லைனா இராமேஸ்வரம் போலாம்னு இருந்த பிளான் மாறி குற்றாலம் போனோம். நாங்க 14 பேர். வேன்ல போனோம். ரொம்ப ஜாலியாக இருந்தது.

வழியில் ஆண்டாள் தரிசனம். போன பதிவுல பார்த்துட்டீங்க இல்ல...இப்போ நேரா போவோம் ஐந்தருவிக்கு....





ஐந்தருவிக்கு போனோம். ஆனா 4 அருவியில தான் குளிக்க முடிந்தது. 5வதில் மிக குறைவான நீர் தான் வந்தது.  ஆண்கள் பக்கம் நல்லா வந்தது, ஆனா பெண்கள் பக்கம் வரிசைல தான் போய் குளிக்க முடிந்தது. வரிசையா குளிக்க.... குளித்த மாதிரியே இல்லை. பெண்கள் பக்கம் 1 அருவியில கொஞ்சம் நல்லா தண்ணி வந்தது. அதுல ஆசையாசையாய் நின்னு குளித்தோம்.




அப்புறம் உடைமாற்றி வர ஆஹா....பதனீர் கேட்கவா வேண்டும் எனக்கு ரொம்பப்பிடிக்கும். ஆனா 1 நிமிட யோசனை....நல்லா இனிக்குமா...? அப்படின்னு கேட்க பானையில இல்லாம தனியா பாட்டிலில் இருந்த பதனியை காட்டி நல்ல இனிக்கும் குடித்து பாருங்கள் என்றார். போன தடவை ஶ்ரீவில்லி புத்தூரில் குடித்தோம் இனிக்கவே இல்லை அதான் முன்னெச்சரிக்கையாய் கேள்வி வந்தது. வராதா....? ஆசையாய் குடிக்கும் போது திருப்தி வர வேண்டாமா...?


                                                           வேன் நின்ற இடம்



பனையோலையை அழகாய் மடித்து குடிக்க தயார் செய்தார். பதனியை ஊற்றினார். அதில் நுங்கு வேற போட்டார். நுங்கு போட்ட பதனி இப்போ தான் முதல் தடவையாய் ( இந்த காம்பினேஷனில்) குடித்தேன். சூப்பர், சூப்பர்.....!!!



                                                                 வேன் நின்ற இடம்



நுங்கு, பதனி,பஜ்ஜி என சாப்பிட்டு விட்டு  கிளம்ப... அன்று  பறித்த பெரிய நெல்லிக்காயை சைக்கிளில் ஒருவர் தள்ளிக் கொண்டு வர 1 கிலோ வாங்கினோம். ஊறுகாய்க்கு தான். (ஊரிலேயே ஊறுகாய் போட்டதால் பதிவாய் போட முடியவில்லை. ) ஆஹா..நெல்லிக்காய்னா அதாங்க. அப்படி இருந்தது புத்தம் புதிதாக....



 ஐந்தருவியில் வேன் நிற்பாட்டிய இடத்தில் கிளிமூக்கு மாங்காய் தொங்குது....



மெயின் அருவிக்கு போகலை ஏன்னா...? மணி 12 மேல் ஆச்சு.....என்னடா இது அருவிக்கு மணியெல்லாம் உண்டான்னு ஒரு நிமிடம் நினைத்தீர்களா...?

கோவிலை அடைத்து விடுவார்கள் இல்லையா...?  அப்புறம் 4 மணிக்குத்தான் திறப்பார்கள் ஆகையால் பாபநாசம் செல்லும் பயணத்தை துவங்கினோம். பொழுதோட போனா அங்கே மறுபடி ஒரு குளியல் போடலாம் இல்லையா... ஆகையால் கிளம்பி விட்டோம்.

வழியெல்லாம் பசுமை,பசுமை, திரிகூடமலை என்ன அழகு. மசாலா சாமன்கள் எல்லாம் அருமையாய் கிடைக்கும். அத்திக்காய் ஊறுகாய் நன்றாக இருக்கும். 5 வருடம் முன்பு வாங்கினோம் ஏமாற்றி விட்டார்கள். 1/2 கிலோ ஹார்லிக்ஸ் பாட்டிலில் வாங்கினால் பார்க்க நிறைய காய் இருந்தமாதிரி இருக்கு ஆனா உள்ளே 10 காய் இருந்தால் அதிகம். ஆகையால் அந்த ஆசையை கைவிட்டு விட்டேன்.

மங்குஸ்தான் பழம் ஆஹா...அருமையாய் இருக்கும். இப்போ சீசன் இல்லாததால் 5 அருவியில் அது கண்ணில் படவில்லை. இல்லைனா அதை ருசிக்காமல் வருவது இல்லை. அந்த பழத்தை ஒரு தடவை சென்னையில் என் கணவர் பார்த்து விட்டு எனக்காக வாங்கி வந்து கொடுக்க எனக்கு இன்பமான அதிர்ச்சியாக போய் விட்டது.  பதனியை பார்க்கவும் வாவா குடி உனக்கு ரெம்ப பிடிக்குமே என வாங்கி விட்டார். நமக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கும் போது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் அல்லா...? இனிய நினைவாய் இனிக்கிறது. இந்நினைவுகள்.

தேனருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி,பழைய குற்றாலம் என அனைத்து அருவியையும் சிறுவயதில் பார்த்து இருக்கிறேன்.

ஐந்தருவி மேல் ஓர் அருவி இருக்கிறது. பழத்தோட்ட அருவி. அதில் அனுமதி கிடையாது. அரசாங்கத்துக்கு உரிய பகுதி. பழமரங்கள் அவ்வளவு இருக்கும். அருவியாய் விழுந்து கொஞ்ச தூரம் ஆறாய் ஓடி ஐந்தருவியாய் விழுகிறது. அங்கும் குளிக்க முடியும். இங்கு நான் 4ங்காவதோ, 5வதோ படிக்கும் போது தென்காசி ஸ்கூலில் இருந்து சுற்றுலாவாக சென்ற போது பார்த்து இருக்கிறேன். நன்றாக  நினைவில் நிற்கிறது. கொய்யாப்பழத்தை பறித்து சாப்பிட்டோம். நம்ம உயரத்திற்கு சிறுவயதில் என்றால் நினைத்துப்பாருங்களேன். மரங்கள் அழகாய் விரிந்து சுதந்திரமாய் வளர்ந்து இருக்கும்.

சிறுவயது நினைவில்....

தேனருவி

ஒரே சீராக நிறைய தண்ணீர் ( பெரிய குழாய் மாதிறியாக) விழும். தேன் கூடுகள் அருவியைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைய கூடு கட்டி இருக்கும். அதனால் தானோ தேனருவின்னு பெயர் என நினைக்கிறேன்.  அப்போது இவ்வருவியில் யாரும் குளித்தது இல்லை என்கிற நினைவு. தேனீ க்கள் நிறைய இருப்பதால் அருகில் செல்ல இயலாது. இப்போ தெரியவில்லை.

செண்பகாதேவி அருவி

தண்ணீர் நன்றாக கொட்டும். இவ்வருவியில் குளிப்பது சிரமமானது. ஆபத்தானதும் கூட. ஆனாலும் நிறைய பேர் அப்போது குளித்து இருக்கிறார்கள். நிறைபேர் இறந்து போயும் இருக்கிறார்கள். யார் சொன்னா கேட்கிறார்கள்.  நல்ல வனாந்தரமான பகுதி. அதிக வெயில் படாமல் நிறைய  மரங்கள் இருக்கும். நீரோடைகள் அழகாய் இருக்கும்.

பழைய குற்றாலம்

ஸ்டெப் கட்டிங் மாதிரி மலையோட அமைப்பு இருக்கும். தண்ணீர் நன்றாக விரிந்து விழும். ஒரே சமயத்தில் நிறைய பேர் நின்று குளிக்கலாம். அருவியின் முன்பு நிறைய இடம் இருக்கும், தண்ணீர் ஓடுவதால் குழந்தைகள் நன்றாக விளையாடி குளிக்க முடியும். நிமிர்ந்து அருவியை பார்க்க அழகோஅழகுதான்.
சீசன் அப்போதான் தண்ணீர் நன்கு விழும். மற்ற நாட்களில் மிக குறைவாக வரும். குற்றாலம் நுழையும் முன்பாக பழையகுற்றாலம், புலியருவி செல்லும் வழி பிரியும். உள்ளே நிறைய தூரம் செல்ல வேண்டும். வாகனம் மூலமாகத்தான் போக முடியும். சீசன் இல்லாத சமயங்களில் சற்று கவனம் தேவை.

புலியருவி

இந்த அருவியும் சீசன் அப்போ மட்டும் தான் தண்ணீர் வரும், குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற அருவி. அழகாய் கட்டிய அமைப்புடன் இருக்கும். மேலே ஒரு அருவியாக விழும் நன்றாக குளிக்கலாம் . அந்த தண்ணீர் கால்வாய் மாதிரிகட்டிய அமைப்பில் ஓடும். குழந்தைகள் நன்கு ஆடலாம். பின் அது இரண்டாக பிரிந்து வலப்பக்கம் இருஇடத்திலும், சற்று தள்ளி இடப்பக்கம் ஒரு இடத்திலும் விழும். ஆண்கள் ஒருபக்கம் ,பெண்கள் ஒரு பக்கமாய் குளிக்கலாம். கோவில்   இருக்கிறது.


சிற்றருவி

இது மெயின்  அருவியில் இருந்து 5தருவிக்கு போகும் வழியில் முதலிலே இருக்கிறது. மெயின்  அருவிக்கு பக்கமாய் இருக்கும். இங்கும் இரண்டு  அருவியாய் விழுகிறது. அருவியைச்சுற்றி கட்டடம் இருக்கும். ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக குளிக்கலாம். கட்டடம் இருப்பதால் மறைவாக இருக்கும். தண்ணீர் அருமையாக விழும்.

ஐந்தருவி

மெயின் பால்ஸில் இருந்து வாகனத்தில் தான் செல்லமுடியும். பஸ்வசதி உண்டு. தண்ணீர் 5 இடங்களில் விழுவதால் ஐந்தருவின்னு பெயர். எப்போதும் ஒரளவிற்கு தண்ணீர் விழுந்து கொண்டு இருக்கும். 3 அருவி பெண்களுக்கு...ஆனா குறைவாகத்தான் தண்ணீர் விழும். ஆண்களுக்கு 2 அருவி தண்ணீர் எப்போதும் நன்கு இந்தப்பக்கம் தான் வரும்.





மெயின் அருவி

பஸ்டாண்ட் பக்கமாக இருக்கிற முக்கியமான அருவி.  நன்றாக தண்ணீர் கொட்டும்.   குற்றால நாதர் இங்கு தான் குடி கொண்டு இருக்கிறார். கோவில் இருந்து பார்க்க அருவியும் மலையும் அழகு..இங்கு இருந்து பார்த்தால் அருவி தெரியும் என எழுதி இருப்பார்கள். கோவிலுக்குள்ளும் அருவி நீர் சலசலைத்து
சிறிய அளவில் ஓட விட்டு இருக்கிறார்கள். சுகமான காற்றையும், சாரலையும் அனுபவித்து இருப்பீர்கள் இப்போது.  சித்திரக்கூட சபை இருக்கிறது, அழகான ஓவியங்களைக் கண்டு ரசிக்கலாம்.



குற்றாலத்தில் இருந்து பாபநாசம் நோக்கி போக ஆரம்பித்து இருக்கிறோம்....



                                                                     பசுமை...அழகு....



                                                         அழகான பாதையும் பசுமையும்.....





                                                   மலையை முத்தமிடும் மேகம்



 
                                                                        வயக்காடு.....



அருவியில குளித்ததால் அதிகமான பசி....மதியம் உணவு...தயிர் சாதம் = உ கிழங்கு பொறியல் + பூண்டு ஊறுகாய்...!!!




                                                           சாப்பிட்ட இடத்தின் அருகில்




                                                                    பயணம் ஆரம்பம்...



                                                   சூரியனை சற்று மறைத்த மேகம்...




                                        மலையைக் கடந்து அடுத்த மலையை நோக்கி...


ஶ்ரீவில்லிபுத்தூர் பதிவு  என்ன சுறுக்கமா முடித்து விட்டீர்கள் என அன்பர்கள் கேட்க...மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டேன்....

அடுத்து பாபநாசம்.....பார்ப்போம்....

அது இவ்வளவு நீண்ட பதிவாக வராதுங்கோ....பொறுமையா வாசித்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.....



37 comments:

  1. இந்தப்பதிவினில் உள்ள விஷயங்களும், காட்டியுள்ள படங்களும், குற்றால அருவியில் குளித்தது போல சும்மா ஜிலுஜிலுன்னு இருக்குது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான முதல் வருகைக்கும் கருத்திற்கும்,ஜில்லுன்னு ரசித்தமைக்கும் மகிழ்ச்சி ஐயா..நன்றி

      Delete
  2. //குற்றாலத்தில் இருந்து பாபசாதம் நோக்கி போக ஆரம்பித்து இருக்கிறோம்....//

    இதில் ’பாபசாதம்’ என்பது ஒருவேளை ’பாபநாசம்’ ஆக இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. இதில் ’பாபசாதம்’ என்பது ஒருவேளை ’பாபநாசம்’ ஆக இருக்குமோ?//

      அதே அதே....டைப்படிக்கும் போது வந்த தவறை மாற்றிவிட்டேன் ...நன்றி ஐயா

      Delete
  3. குற்றாலத்திற்கு நேரில் சென்று வந்தது போல் ஓர் உணர்வு. மாங்காய் காய்த்துத் தொங்கும் மாமரம் அழகு.

    அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான முதல் வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்.

      Delete
  4. ஸ்ரீவில்லிப்புத்தூரில், வத்ராப்பில் எல்லாம் வேலை பார்த்திருந்தும் குற்றாலம் பார்த்ததில்லை. இரண்டுமுறை வாய்ப்பு வந்து நழுவிப் போனது. அப்புறம் வாய்க்கவே இல்லை!

    அருவிக்குள் நுழைந்து பார்த்தால் குகை இருக்குமாமே, அப்படியா?

    பதநீர் குடித்ததே இல்லை. ஏனோ குடிக்கத் தோன்றாது!

    நீங்கள் ரசித்து எழுதி இருப்பதை ரசித்துப் படித்தேன். தென்காசி என்றால் நம்ம திடங்க்கொண்டு போராடு சீனு நினைவுக்கு வருகிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீவில்லிப்புத்தூரில், வத்ராப்பில் எல்லாம் வேலை பார்த்திருந்தும் குற்றாலம் பார்த்ததில்லை. இரண்டுமுறை வாய்ப்பு வந்து நழுவிப் போனது. அப்புறம் வாய்க்கவே இல்லை!//

      இப்போ வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு சென்று வாருங்கள் சகோ.

      குகை பற்றி தெரியவில்லையே சகோ...

      ஒருமுறை பதனீர் அருந்திப் பாருங்கள் சகோ. மிகவும் பிடித்து விடும். உடம்பிற்கு அவ்வளவு நல்லது. காலையில் வெறும் வயிற்றில் அருந்த உடல் குளிர்ச்சியாக இருக்கும். எங்க ஊர் பக்கமும் பதனி கலையில் 5.30, 6 மணிக்கு கொண்டு வருவார்கள். என் சிறுவயதில். நானும் என் அண்ணனும் கலையில வாங்கிக் குடிப்போம். தினமும் வா என்று சொல்லி விட்டால் போதும். தினமும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். இப்போ எல்லாம் கனவாகிப் போய் விட்டது.

      ஆஹா...சீனு சகோவும் அந்தப்பக்கம் தானா...சந்தோஷமாக இருக்கிறது. ஊமைக்கனவுகள் சகோவும் அந்தப்பக்கம் தானா...கருத்துரையில் அவர் பதிவிட்டதில் அறிந்து கொண்டேன்.

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  5. குற்றாலத்திற்கு இரு முறை சென்றுள்ளேன். இருந்தாலும் தங்களது பதிவு மூலமாக சென்றபோது நேரில் சென்றபோது காணாத பலவற்றைக் கண்டேன். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. குற்றாலத்திற்கு இரு முறை சென்றுள்ளேன்//

      அருமை ஐயா.

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  6. வருடம் ஒருமுறையாவது சென்று விடுவோம்...

    படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம்...

    ReplyDelete
    Replies
    1. வருடம் ஒருமுறையாவது சென்று விடுவோம்//

      கொடுத்து வைத்தவர் சகோ நீங்கள்...

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  7. இயற்கையின் அழகில் மூழ்கி இருப்பது பிடித்தமான விஷயம். அனைத்தையும் ரசித்தேன்.

    அடுத்த சீசனிலாவது குற்றாலம் செல்ல வேண்டும். பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இயற்கையின் அழகில் மூழ்கி இருப்பது பிடித்தமான விஷயம்//

      உங்கள் பதிவில் தெரிகிறது....எவ்வளவு இடங்கள் பார்த்து இருக்கிறீர்கள்...

      அவசியம் செல்லுங்கள் சகோ. இனிமேல் தான் இவ்வருட சீஸன் ஆரம்பிக்க போகிறது. அடுத்தவருடம் ஏதற்கு... . ஜீன் - ஆகஸ்ட், செப்டம்பர் வரை நன்றாக இருக்கும். செல்லுங்கள் சகோ


      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  8. சில ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்திற்குச் சென்ற நினைவுகள் நெஞ்சில் மலர்ந்தன..

    கிட்டத்தட்ட - பயணத்திட்டமும் இதே தான்!..

    அழகிய படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சில ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்திற்குச் சென்ற நினைவுகள் நெஞ்சில் மலர்ந்தன..

      கிட்டத்தட்ட - பயணத்திட்டமும் இதே தான்!.. //

      சூப்பர் ஐயா...நன்றாக என்ஜாய்..பண்ணி இருப்பீர்கள்...


      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  9. பயணமும் பதிவும் படங்களும் அருமை. குற்றாலத்தை நேரில் தரிசித்த திருப்தி.

    த ம +1

    ReplyDelete
    Replies

    1. மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  10. வணக்கம் சகோ..!

    ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா..?

    நேற்றிரவு வரை நான் அங்குதானே இருந்தேன்..!

    வலையில் விருந்து படைக்கும் உங்களுக்கு என் வீட்டில் விருந்து படைத்திருப்பேனே..!

    இதற்குமுன் நீங்கள் குற்றாலம் பற்றிய பதிவிட்டிருந்தபோதும் நான் அங்கிருந்தேன்.

    என்ன ஒற்றுமையோ தெரியவில்லையே..!

    என் ஊரும் வீடும் குற்றாலத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டருக்குள்தான்.

    இருப்பது வேறிடமாய் இருந்தாலும்.!


    எப்படியோ நல்லதொரு விருந்துபச்சாரத்தை இழந்துவிட்டீர்கள். :((

    நமக்குப் பிடித்ததைப் பற்றி யார் பேசினாலும் சுகம் தான்.

    நம் ஊர் பற்றி என்றால் கேட்கவா வேண்டும்?

    அரைமணி நேரமாக உங்கள் இந்தப் பதிவையே படித்துக் கொண்டிருக்கிறேன்.

    மீண்டும் மீண்டும்....!

    இத்தனைக்கும் காலைதான் வந்தேன் அங்கிருந்து!


    மீண்டும் உடல் அலுப்பில்லாமல் அங்குக் கொண்டு சேர்த்தமைக்கு நன்றிகள்!

    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா..?

      நேற்றிரவு வரை நான் அங்குதானே இருந்தேன்..!//

      அடடா...தெரியாமல் போய் விட்டதே சகோ... நீங்கள் அந்தப்பக்கம் என்று...

      விருந்து என்று நீங்கள் சொன்னதே எனக்கு விருந்து சாப்பிட்டது போல் நிறைவாய் இருக்கிறது சகோ. உங்களை கண்டு வந்திருப்போம். அதுவே ஒரு விருந்து தானே...? இல்லையா சகோ...


      இதற்குமுன் நீங்கள் குற்றாலம் பற்றிய பதிவிட்டிருந்தபோதும் நான் அங்கிருந்தேன்.

      என்ன ஒற்றுமையோ தெரியவில்லையே..!

      என் ஊரும் வீடும் குற்றாலத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டருக்குள்தான்.

      இருப்பது வேறிடமாய் இருந்தாலும்.!//

      ஆமாம் சகோ உண்மைதான்..அடுத்த முறை வரும் போது உங்கள் ஊருக்கு வருகிறேன் சகோ அச்சமயம் தாங்கள் அங்கிருந்தால்....


      எப்படியோ நல்லதொரு விருந்துபச்சாரத்தை இழந்துவிட்டீர்கள். :((//


      :((((((((.................வருத்தமாய் இருக்கிறது சகோ....


      நமக்குப் பிடித்ததைப் பற்றி யார் பேசினாலும் சுகம் தான்.

      நம் ஊர் பற்றி என்றால் கேட்கவா வேண்டும்?//

      ஆமாம் சரியாச் சொன்னீங்க...எனக்கும் இதை எழுதும் போது...... அவ்வளவு ஆனந்தமாக இருந்து கொண்டே இருந்தது.....என்னமோ பழைய நினைவுகள். அழகாய் மீண்டும் வாழ்ந்தது போல் குதூகலமாய் இருக்கிறது. நானும் இப்பதிவை படித்து, படித்து மகிழ்கிறேன். சகோ. ஏனோ தெரியவில்லை...!


      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  11. நீண்ண்ண்ட பதிவு. படங்கள் அட்டகாசமாக இருக்கு. நானும் குற்றாலம் சென்று குளித்திருக்கேன்.ஆனால் ஐந்தருவியில் குளிக்க முடியவில்லை. நிறைய விபரங்கள் இப்பதிவின் மூலம் அறியமுடிந்தது. முன்பு இருந்த,வாழ்ந்த இடங்களுக்கு திரும்ப போனால் பழைய நினைவுகள் வரத்தான் செய்யும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீண்ண்ண்ட பதிவாய் தான் போய் விட்டது சகோ...நானும் அதனால் தான் நிறுத்திக் கொண்டு விட்டேன்......

      ஆஹா...குற்றாலம் சென்று மகிழ்ந்து இருக்கிறீர்கள்...சந்தோஷம்...

      அடுத்த தடவை வரும் போது 5 அருவிக்கு சென்று வாருங்கள்..சகோ...

      முன்பு இருந்த,வாழ்ந்த இடங்களுக்கு திரும்ப போனால் பழைய நினைவுகள் வரத்தான் செய்யும்//

      ஆம் அதுவும் சிறுபிராயம் என்றால் அது நம்முடன் ஒட்டிக் கொள்ளும்...காலகாலத்திற்கும்....

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  12. புகைப்படங்கள் அத்துனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  13. குற்றாலம் பதிவும் படங்களும் அட்டகாசம் சகோ. நாங்களும் வருடம் தோறும் சீசனுக்கு சென்று விடுவோம். எங்கள் ஊரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவு தான்.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊருக்கு பக்கத்துல தான் சகோ. நான் நிறைய வருடங்கள் முன்பு உங்க ஊருக்கு வந்து இருக்கிறேன். அண்ணன் அங்கு தான் 6 - 12 வகுப்புகள் வரை படித்தார்கள். பள்ளியின் பெயர் நினைவில்லை. சகோ. ஹாஸ்டல் வாசம் ..... ஆகையால் வந்து இருக்கிறேன்.

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  14. பார்த்தால் பரவசம்
    படித்தால் பரவசம்
    சுவாசித்தால் சுகம்
    குளித்தாலோ குளிரே சுகம்

    புதியதொரு....
    குற்றால குறவஞ்சி

    வெகு சிறப்பு சகோ!

    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  15. நான் குற்றாலம் போகும் போதெல்லாம் ஐந்தருவி மேல் பழத்தோட்ட அருவி போகாமல் வந்ததில்லை புகைப்படங்கள் அனைத்தும் அருமை
    பதனியில் நுங்கா ? புதுசா இருக்கே இதுவரை நான் அப்படி குடித்துப் பார்த்ததில்லை.
    பின்னாலேயே பாபநாசம் வருகிறேன்.
    தமிழ் மணம் 8

    ReplyDelete
    Replies
    1. நான் குற்றாலம் போகும் போதெல்லாம் ஐந்தருவி மேல் பழத்தோட்ட அருவி போகாமல் வந்ததில்லை//

      சூப்பர் சகோ....

      பதனியில் நுங்கா ? புதுசா இருக்கே இதுவரை நான் அப்படி குடித்துப் பார்த்ததில்லை.//

      அடுத்த முறை செல்லும் போது அருந்தி வாருங்கள் சகோ....

      வாங்க வாங்க பாபநாசத்திற்கு......

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  16. வணக்கம்
    ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கமும் படங்களும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  17. முன்பு வருடா வருடம் போவதுண்டு ,இப்போ என் பசங்க வளர்ந்து விட்டார்கள் ,ஏனோ அவர்களுக்கு குற்றால குளியலில் அதிக இஷ்டம் இல்லை ,இந்த தலை முறையே இப்படித்தானோ :)

    ReplyDelete
    Replies
    1. ,இந்த தலை முறையே இப்படித்தானோ :)//

      அப்படி சொல்வதற்கு இல்லை ஐயா....அங்கு நிறைய இளம் தலைமுறையினர் வந்து குதூகலித்து மகிழ்ந்தார்கள்...

      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள்.

      நீங்கள் தொடர்ந்து வருடம் ஒரு முறையை தொடருங்கள் ஐயா...சகோதரியார் மகிழ்வார்கள் அல்லவா....

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி.

      நன்றிகள்

      Delete
  18. சின்ன வயது நினைவுகள் அருமை.

    குற்றாலம் பற்றி பாடத்தில் படித்ததோடு சரி, போனதில்லை. ஒவ்வொரு அருவிக்கும் ஒவ்வொரு இடம் போக வேண்டுமா ? எல்லாமும் விளக்கமா கொடுத்திருக்கீங்க. தென்தமிழகம் போனால் கட்டாயம் போக வேண்டும். அருவிகளும், பசுமையான மலைப் பகுதிகளும் சேர்ந்து குளுகுளுவென இருக்கிறது.

    பாபநாசம் செல்லும் வழியில் பசுமை கொஞ்சுகிறது.

    ReplyDelete
  19. அருமையான படங்கள்
    உண்மையான
    உணர்வு வெளியீடுகள்

    ReplyDelete
  20. அருமையான படங்கள்
    உண்மையான
    உணர்வு வெளியீடுகள்

    ReplyDelete